கிறிஸ்துவுக்குள் ஒரு விசுவாசியின் ஸ்தானம்
Chicago, Illinois, USA
55-0116A
1உட்காரலாம், உங்களுடைய ஒத்துழைப்பிற்காக மிக்க நன்றி. இந்த பாராட்டுக்களை என்னுடைய நண்பனும் சகோதரனுமான சகோ.ஜோசப் என்னை நேசிப்பதன் காரணமாக அந்தக் காரியங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நாங்கள் தாமதமாக வந்ததற்காக நான் வருந்துகிறேன். நாங்கள் இங்கே மூன்று மணிக்கு இருப்போம் என்று நேற்று இரவு கூறினேன். ஆனால் ஏதோ நடந்தது என்று நான் நினைக்கிறேன். நான் இங்கு வந்தபோது கொஞ்சம் தாமதம் ஏற்படும் என்று அவர்கள் கூறினார்கள்.
ஆகையால் ஜெப அட்டையை ஆறு மணியளவில் விநியோகிக்கப் போவதாகவும், அடுத்த ஆராதனையானது ஏழு மணிக்கு என்றும் அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன். ஆகையால் அது ஒரு முழு மத்தியானத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதால், என்னுடைய ஆராதனையை சீக்கிரமாக முடிக்க நினைக்கிறேன். ஏனெனில் உங்களில் அநேகர் மதிய உணவிற்காகவோ அல்லது வேறெதற்காகவோ வீட்டிற்குத் திரும்ப வேண்டியுள்ளனர். சிலர் வீட்டிற்குப் போக விரும்புகிறார்கள், சிலர் இங்கேயே இருக்க விரும்புகிறார்கள், தேவன் உங்களை எப்படி வழி நடத்துகிறாரோ அப்படியே செய்யுங்கள்.
(சகோ. ஜோசப் கூறுகிறார், ''சகோ. பிரான்ஹாமே நீங்கள் இந்த கூட்டத்தை இரண்டரை மணிக்கு நடத்த விரும்பினால், மக்களும் அவ்வாறே விரும்புகிறார்கள், நாம் இரண்டரை மணிக்கே அதை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்“.) நல்லது, அது அநேகமாக சரியாக இருக்கும், பிற்பகலிலே, ஞாயிறுபிற்பகல் அடுத்த ஞாயிறு பிற்பகல் அவர்கள் இரண்டரை மணிக்கு என்று அறிவிக்கிறார்கள்,அது சற்று சீக்கிரமாக உள்ளது என்று சகோ. ஜோசப் கூறுகிறார். உங்களுக்குத் தெரியுமா, அவ்வாறு சற்று முன்பாக வேண்டியது சற்று கடினமாக ஆக்குகிறது.
2இப்பொழுது இங்கு வரும்போது நான் நினைத்துக் கொண்டிருந்தேன்... ஒரு பிரசங்கி எப்படிச் செய்வார் என்று உங்களுக்குத் தெரியுமா. நீங்கள் எங்கேயாவது சென்று இப்படிக் கூறுவீர்களாகில், ''நல்லது, இப்பொழுது“, நீங்கள் பேசத் துவங்கும் போது, ''நல்லது, நான் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பேசப் போகிறேன்” எனக் கூறுகிறீர்கள். நீங்கள் அங்கு சென்ற பிறகு, ''அது வேலை செய்யாது“ என்று தேவன் கூறுவார், ஆகையால் நீங்கள் திரும்பவும் முதலில் இருந்து துவங்குவீர்கள்.
நான் அங்கு பின்னால் அமர்ந்து கொண்டு, தேவனுடைய தவறாத வாக்குத்தத்தங்கள்… என்கிற தலைப்பின் பேரில் பேச எத்தனித்தேன். நான் அங்கு பின்னால் அமர்ந்து கொண்டு அது எனக்கு ஒன்றரை மணிநேரம் ஆகும் என நினைத்தேன். நான், ''தேவனே...“ என்றேன். தேவன் நான் அதைச் செய்யாதிருப்பது நல்லது எனக் கூறினார்.
ஆகையால் நான் இங்கே இந்த வேத வசனத்தை சற்று திருப்பி தேவனுக்கு சித்தமானால், சில நிமிடங்கள் உபதேசிக்க எண்ணுகிறேன். இப்பொழுது இன்று இரவில் ஆராதனை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்னால் இயன்றவரை அடுத்த இருபது அல்லது முப்பது நிமிடத்திற்குள் முடித்து வெளியேற விரும்புகிறேன். அது நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் சென்று திரும்ப வாய்ப்பைத் தருவதோடு, இன்று இரவு சுகமளிக்கும் ஆராதனை இருக்குமானால் எனக்கும் சிறிது அவகாசம் கிடைக்கும்.
3கர்த்தருடைய தூதன்... என்று சில நிமிடங்களுக்கு முன்பு சகோ. ஜோசப் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாளைய தினத்தில் அவர்கள் இங்கு கொண்டிருப்பார்கள். புத்தகங்கள் இல்லாதவர்களுக்காக சில புத்தகங்களையும் வைத்திருப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று நாங்கள் அவற்றை விற்பதில்லை. நாங்கள்... நல்லது, நான் அவற்றை 40% தள்ளுபடி விலையில் வாங்கினேன். கீழே அமர்ந்திருக்கும் திரு. உட்ஸ் மற்றும் திரு. பீலர் அவர்கள் தான் அந்த பொருட்களுக்கான என்னுடைய முகவர்கள், அவர்கள் இருவரும் அந்த காரியங்களை கவனித்துக் கொள்வார்கள், திங்கள் அன்று உங்களுக்கு அந்த படங்களில் ஒன்று வேண்டுமென்று விரும்பினால், ஒன்றோ அல்லது உங்களுக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாம்.
இப்பொழுது, இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனை உள்ளதால் சீக்கிரமாக வருவதற்கு நிச்சயித்துக் கொள்ளுங்கள், ஆறு மணியளவில் வந்து உங்கள் எண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நாங்கள் அந்த எண்களைக் கொண்டு அழைப்போம். புதிய மக்கள் வருவதால் நாங்கள் தினமும் புதிய அட்டைகளைத் தருகிறோம்; எல்லா அட்டைகளையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிட்டால், அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காது. இந்தக் கூட்டத்தின் ஒழுங்குமுறை பற்றி உங்களில் அநேகருக்குத் தெரிந்திருக்கும்; எவ்வாறு அதைச் செய்ய வேண்டுமென்று அறிந்துள்ள விதமாக, நாங்கள் தேவனுக்கு முன்பாக அதை உண்மையாகவும் உத்தமமாகவும் செய்ய முயற்சிக்கிறோம்...
4ஆகையால், எங்களுக்குத் தெரிந்த சிறந்த வழி அதுவே ஆகும். ஒவ்வொரு நாளும் அனைவருக்கும்... நீங்கள் முதலாவது வரும்போது எல்லா அட்டைகளையும் கொடுத்துவிட்டால் இரண்டாம் நாள் வருபவர்கள் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள இயலாது. ஒருவேளை நீங்கள்... தினமும் புதியதாக நீங்கள் அதைக் கொடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் அதை ஊழியக்காரர்களுக்கு கொடுப்பீர்கள்என்றால்; சிறிது காலம் நாங்கள் அதை முயற்சித்தோம், அவர்கள் சில வெளியாட்களுக்கோ அல்லது அவர்களுடைய மக்களில் ஒருவருக்கோ அந்த ஜெப அட்டையைக் கொடுத்துவிட்டால், அவர்கள் இங்கு ஜெப வரிசையில் வர இயலாமல் போய்விடும். அங்கு தான் நீங்கள் உள்ளீர்கள், அது உங்களுக்கு ஒரு கடினமான உணர்வுகளை ஏற்படுத்தும்.
இந்த எட்டு வருட பயணத்தில் நாங்கள் அந்த எல்லாக் காரியங்களையும் சரி செய்து, தினமும் ஆராதனை துவங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக நாங்களே ஜெப அட்டைகளை மக்களுக்குக் கொடுப்போம். பிறகு எங்கிருந்து அழைக்க வேண்டுமென்று தேவன் எந்தவிதமாக எங்கள் இருதயத்தில் அருளுவாரோ அந்த விதமாக நாங்கள் அழைப்போம்.
5இப்பொழுது எத்தனைப் பேருக்கு ஞாயிறு பள்ளி பிடிக்கும்? நம்மெல்லாருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். ஞாயிறு பள்ளியை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆகையால் சிறிது நேரம் நாம் ஞாயிறு பள்ளியை நடத்துவோம். நான் மிகவும் நீண்ட நேரம் பிரசங்கிக்கவுள்ளதால் நான் என் கைக்கடிகாரத்தை இங்கே கழற்றி வைக்கிறேன்.
இப்பொழுது நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்மதிப்பு அளிக்கும்படியாக வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் எபேசியருக்கு எழுதிய புத்தகத்திற்கு திருப்புவோம். அவருடைய வார்த்தைக்காக அவருக்கு துதி ஏறெடுப்போம்.
''விசுவாசம் கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதனாலே வரும்“ (ரோ:10:17).
தேவன் தமது மகத்தான அற்புதமான வாக்குத்தத்தங்களில் இருக்கிறார். அவைகள் தவறாதவைகள், வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கூட ஏனென்றால் வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது, அது அப்படித் தான் இருந்தாக வேண்டும்.
6நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தை எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்வது முக்கியமான காரியம். தேவன் காலங்களையும் காலவரையறைகளையும் குறித்து வைத்தார். அவை அனைத்தும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுகின்றன. அவர்களில் அநேகர் கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்பாக அநேக கள்ள காரியங்கள் எழும்பி ''இது தான் மேசியா, மற்றும் இது...“ என்றார்கள். வேத வசனம் உரைத்தபடியே, கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன்பாக அநேக பொய்யான காரியங்கள் நடைபெற்றன.
மக்கள் தாங்களாகவே அதைச் செய்ய முயற்சி செய்கிறார்கள். தேவனுடைய வார்த்தையை அவர்களுடைய திட்டத்தில் பொருந்தும்படியாகச் செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் நீங்கள் அதை தலைகீழாகப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய திட்டத்தில் பொருந்த வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அதுதான் உண்மை என்று நாம் அறிந்துள்ளோம்.
இப்பொழுது, மோசே, இஸ்ரவேல் ஜனங்களை அவன் விடுவிக்கப் போகிறான் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று அறிந்திருந்தான். நல்லது, மோசே அந்த நோக்கத்திற்காக... அழைக்கப்பட்டான் என்பதை அறிந்திருந்தான். நீங்கள் தேவனிடத்திலிருந்து ஒரு அழைப்பைப் பெற்றிருக்கும் போது, நீங்கள் உடனடியாக குதித்து எழுந்து தேவனுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று அர்த்தம் கொள்ளவில்லை. நீங்கள் தேவனுடைய சித்தம் என்ன என்பதையும் அதைச் செய்வதற்கு தேவனுடைய நேரம் என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள், தங்களை விடுவிக்கிறவர் நானே என்று அறிந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆகையால் அவன் அவ்விதமாக செய்யத் துவங்கி, ஒரு மனிதனைக் கொன்றுபோட்டான். பிறகு அவன் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று அறிந்து கொண்டான்.
7பிறகு மோசே பெற்றிருந்த எல்லா நம்பிக்கையையும், எல்லா பெலனையும் இழந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு விடுதலை இல்லை என நினைத்தான். ஒருநாள் தேவன் அவனை எரிகிற முட்செடியில் சந்திக்கும் வரை அவன் விடுதலையின் அனைத்து எண்ணங்களையும் இழந்தவனாகக் காணப்பட்டான். பிறகு தேவனுடைய காலமானது சரியாக வந்தபோது, அவர் தனது திட்டத்தை மோசேக்கு வெளிப்படுத்தினார்.
இப்பொழுது மோசே விடுதலையைக் குறித்து மறந்ததின் காரணம் என்னவென்றால், அவன் அவர்களை விடுவிப்பான் என்ற தேவனின் வாக்குத்தத்தத்தை மறந்ததே, ஆனால் தேவன் தமது வாக்குத்தத்தத்தை மறக்கவில்லை. மோசே தானாகவே முயன்று தோற்றுப் போனான். அதைத் தான் சபை அநேகந்தரம் செய்துள்ளது. தேவனுடைய காலத்தின் தன்மையை அறிந்து கொள்ளத் தவறும் போது, நாம் நாமாகவே காரியங்களைச் செய்ய முயற்சி செய்கிறோம்.
8தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை வைத்து வைத்திருக்கிறார். அவர்... அவர் உரிய நேரத்தை உடையவராக இருக்கிறார். நாம் சோளத்தை விதைக்கிறோம். நாம் சோளத்திற்காக உழுவதற்கு நமக்கு ஒரு நேரம் இருக்கிறது, பிறகு அந்த சோளத்தை அறுவடை செய்ய ஒரு நேரம் இருக்கிறது. வசந்த கால மழை பெய்கிறது, கோடை காலத்தில் வறட்சியும், பின் இலையுதிர்கால மழையும், அதன் பின் பனியும் கொட்டுகிறது. நீங்கள், ''இன்றைக்கு என்னுடைய கோதுமையை நட்டு, நாளைய தினத்திலே சென்று அதை அறுவடை செய்வேன்“, என்று நீங்கள் கூற முடியாது.
பருவகாலத்திற்கு தேவன் காலங்களை வைத்து இருக்கிறார். அவருடைய வார்த்தைக்கும் காலங்களை வைத்துள்ளார். தேவனுக்கென்று ஒரு நேரம் இருக்கிறது... வேத வசனத்திலே, ''பிணியாளிகளை குணப்படுத்துவதற்காக தேவ பிரசன்னம் அங்கே இருந்தது“ என்று உரைக்கப்பட்டுள்ளது. இயேசு ஊழியம் செய்த பொழுது அவ்வாறாகவே இருந்தது. பிணியாளிகளை குணப்படுத்தும்படியாக கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இருந்தது. ஒருவேளை மற்ற நேரங்களில் பிணியாளிகளை குணப்படுத்துவதற்கு கர்த்தருடைய பிரசன்னம் அங்கே இல்லாமல் போயிருக்கக் கூடும். தேவன் எல்லாவற்றையும் பருவகாலத்தின்படி நடப்பிக்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். இங்கே மோசேயானவன், தேவனுடைய காலவரையறையை அறியத் தவறிவிட்டான்.
9பிறகு தேவன், அவரை எரிகிற முட்செடியில் அவனுக்கு வெளிப்படுத்தினபோது, அந்த எரிகிற முட்செடியில் இருந்த அந்தக் காரியத்தைத்தான், தான் பெற்றிருக்கவில்லை என்பதைக் கண்டு கொண்டான்.
இன்று நம்மில் அநேகரிடம் அதே காரியம்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அநேக முறை நாமாகவே காரியங்களைச் செய்ய முயற்சி செய்து அந்த எரிகிற முட்செடியின் நடுவில் என்ன இருந்ததோ; தேவனுடைய சித்தத்தையும் நேரத்தையும் குறித்த நேரடியான வெளிப்பாடு. அதைத் தவறிவிட்டவர்களாக உள்ளோம்:
இன்றைக்கு இங்கே சில சோளத்தை விதைத்தால் அது என்ன நன்மையை அளிக்கும்? அது அழுகிப் போகும் அங்கு எதுவும் நடைபெறாது. அது முளைத்தால், அந்த ஜீவகிருமியை குளிர்கால நிலையானது கொன்றுவிடும். அது வேலை செய்யாது. அதற்குரிய பருவ காலத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.
10ஆகவே மோசே தேவனுடைய அசலான, நேரடியான சித்தத்தையும், நேரத்தையும் மற்றும் எல்லாவற்றின் வெளிப்பாட்டையும் அறிந்துக் கொண்ட போது... இப்பொழுது அவனை எகிப்தை விட்டு வெளியே வைக்க முயற்சி செய்யுங்கள். எவ்வளவு தீவிரமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு தீவிரமாக எகிப்திற்குத் திரும்பிச் சென்றான். தேவன் விடுதலையை வாக்குத்தத்தம் செய்திருந்தார் என்றும், விடுதலைக்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவன் அறிந்திருந்தான். ஏனென்றால் அது நேரடியாக...
இப்பொழுது முதலாவதாக மோசே வார்த்தையை நோக்கிக் கொண்டிருந்தான். தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு விடுதலையை வாக்குத்தத்தம் செய்திருந்தது. காலம் சமீபமாய் இருக்கிறதென்று அவன் அறிந்திருந்தான், இப்பொழுது அந்த காரியத்தை எப்பொழுது எவ்வாறு செய்ய வேண்டுமென்று அறிந்து கொள்வதற்கு தேவனுடன் ஒரு நேரடியான தொடர்பு கொள்ள வேண்டியதாக இருந்தது.
11இப்பொழுது, முழு சுவிசேஷ மக்களாகிய நாம் வார்த்தையை நோக்கிப் பார்த்து, ''தேவன் இதைக் கூறினார்“ என்று கூறி அநேக தவறுகளைச் செய்துவிட்டோம். அந்த திட்டத்தில் பொருந்தும் படியாக நமது வாழ்க்கையைக் குறித்த நேரடியான வெளிப்பாட்டை அறிந்து கொள்ள நாம் தவறிவிட்டோம். நாம் அதை அறிந்து கொள்ளும்போது, அது நடந்தேறியாக வேண்டும். அவ்வாறு தான் அது தவறியுள்ளது என்று நான் நினைக்கிறேன்.
அநேக முறை மக்கள் வெளியே சென்று சகோ. பில்லி கிரஹாம் போன்ற சுவிசேகர்களைப் பார்க்கிறார்கள். நான் சகோ. பில்லி கிரஹாமைப் போல இருக்க முயற்சி செய்தால் அது எனக்கு எந்தவிதமான நன்மையைச் செய்யும்? நான் அவ்விதம் இருக்க வேண்டும் என்றால் என்னால் அதைச் செய்ய முடியாது. நான் பார்த்துக் கொள்ளும்படியாக எனக்கென்று ஒரு ஊழியம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மனிதர் அவருடைய ஊழியத்தைப் பெற்றிருக்கிறார், மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊழியத்தைப் பெற்றுள்ளனர். இல்லத்தரசிகளுக்கும் கூட தேவனுடைய வார்த்தைக்கு ஊழியம் செய்யும் ஒரு ஊழியம் கொடுக்கப்பட்டுள்ளது.
12இப்பொழுது, நான் திரு. கிரஹாமைப் போல என்னை உருவகப்படுத்திக் (impersonate) காட்ட நினைத்தால், நான் விரைவில் என்னை பிரச்சனைக்குள்ளாக்குவேன்,ஏனென்றால் அவர் ஒரு சாமார்த்தியமான, விவேகமுள்ள, படித்த, உண்மையான பிரசங்கி. நல்லது, ஆனால் நான் அவ்வாறு இல்லை. நல்லது, ஒருவேளை திரு. கிரஹாம் என்னைப் போல உருவகப்படுத்திக் (impersonate) காட்ட நினைத்தால் அவரும் கூட பிரச்சனைக்குள்ளாவார்.
ஆகவே, அதுதான் காரியம், ஆகவே நாம் அதைச் செய்ய இயலாது. நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் நமக்கு வெளிப்படுத்தினாரோ அதையே நாம் செய்ய வேண்டும். சகோ. கிரஹாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார், தேவன் அவருக்கு உலகளாவிய எழுப்புதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதைக் கொண்டு சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கிறார். நான் அவரை மெச்சிக் கொள்கிறேன். வியாதியஸ்தருக்கு ஊழியம் செய்யும்படி தேவன் எனக்கு அளித்த வெளிப்பாட்டின் மூலம், நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறினாரோ அதைச் செய்ய என்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறேன்.
13இப்பொழுது, நாம் நம்முடைய நிலையை அறிந்து, தேவனுடைய வார்த்தை தான் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளது என்று அறிந்து கொண்டால்... அந்த காரணத்தால் தான் யோசுவாவும் காலேபும் அந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பூமியை சுதந்தரிக்க முடியாது என்ற எந்தவித பயமும் இல்லாதவர்களாக காணப்பட்டனர். ஏனென்றால் மீதமுள்ள அந்த ஒன்பது... அல்லது, பத்து நபர்களும் திரும்பி வந்து ''நம்மால் அதைச் செய்ய இயலாது. ஏன், அந்த பட்டணத்தினுடைய மதில்கள் உயரமானவையும், அந்த மக்களுக்கு முன்பாக நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போலவும் காணப்படுகிறோம் என்று கூறி ஜனங்களை கலங்கடித்தார்கள். அவர்கள் மிகவும் பெரியவர்களாகவும் ஆயுதம் தரித்தவர்களாகவும் இருக்கிறார்கள்“ என்று கூறி, ''நம்மால் அதைச் செய்ய முடியாது” என்று கூறினார்கள் பாருங்கள்; அவர்கள் காரண காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நீங்கள் காரண காரியத்தைப் பார்க்க முடியாது; நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். இப்பொழுது, தேவன் தம்முடைய தூதனை ஏற்கனவே அனுப்பி, அந்த தூதன் பாளையத்திலே உலாவிக் கொண்டிருந்தார், தேவனுடைய வெளிப்பாடானது அவரது வார்த்தையின் பிரத்தியட்சமாகுதலைக் கொண்டு வந்தது. இப்பொழுது அவர்கள் அந்த வாக்குத்தத்த பூமிக்குள்ளாகப் பிரவேசிக்க ஆயத்தமாயிருந்தார்கள்.
14ஆகவே யோசுவாவும் காலேபும் எல்லா... வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கானது... அந்த தேசத்தை தேவன் அவர்களுக்கு அளிக்கப் போவதாக வாக்குத்தத்தத்தம் செய்திருந்த படியால், இந்நேரம் வரும் வரை அவர்கள் காத்திருந்தனர்; சற்று நேரத்திற்குப் பின்பு பரிசுத்த ஆவியானவர் மோசேயினிடத்திற்கு இறங்கி வந்தார். அக்கினிஸ்தம்பமானது அவர்களுக்கு மேலாக உருவானது. அவர்கள் அதைப் பின்பற்றினார்கள். சரியாக அந்த வாக்குத்தத்த தேசத்திலே உந்திச் செல்ல ஆயத்தமாயிருந்தனர். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் தவறாதவைகள்; ஆதலால், அவனால் விசுவாசிக்க முடிந்தது. அவைகள் சத்தியமானவைகள்.
நண்பர்களே இத்தனை வருடங்களினூடாக அது கடந்து வந்ததைக் குறித்து நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? கூட்டத்திற்கு எதிர்ப்புகள் மத்தியில், உலகம் முழுவதும் நான் போகும்படியாக தேவன் என்னை அனுப்பிய இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு தேசங்களில் இதைப் பொய்யென நிரூபிக்க முயற்சிக்கும் குறை கூறுபவர்களும், எதிர்ப்பாளர்களும், பேய்களும், விஞ்ஞானிகளும் அங்கே இருந்து கொண்டு சோதிக்கப்படக் கூடிய எல்லாவிதமான சோதனைகளையும் வைத்தார்கள்.
15தேவனுடைய கிருபையினாலே ஒரு கணப்பொழுதேனும் நான் பயந்ததாக ஒருபோதும் ஒருமுறை கூட நான் கண்டதில்லை. ஏன்? 'ஏனென்றால் தேவன் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார், பாருங்கள். நான் அவரை விசுவாசிக்கிறேன், அவ்வாறே, எதிர்ப்புகள் வரும்பொழுது, ஏன், அதைப் பார்த்துக் கொள்ள வேண்டியவன் நான் அல்ல, தேவனே அதைப் பார்த்துக் கொள்ள வேண்டியவராயிருக்கிறார்; அவர் எங்கெல்லாம் என்னைப் போகும்படி சொல்லுகிறாரோ அங்கெல்லாம் செல்ல வேண்டியது மட்டுமே நானாக இருக்கிறது: அது சரியே. எதிர்ப்புகளை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
16இப்பொழுது சில நிமிடங்களுக்கு கிறிஸ்து இயேசுவுக்குள் நம்முடைய நிலை என்னவாயிருக்கிறது என்று அறிந்து கொள்ள இப்பொழுது சபையானது அவர்கள் என்னவாயிருக்கிறார்கள், எப்படி அதற்குள் நுழைவது; நுழைந்தபின் என்ன செய்ய வேண்டும்; ஏன்? என்றெல்லாம் அந்த காரியங்களை அறிந்து கொள்ளும்போது அது ஒரு மகிமையான காரியமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா?
இப்பொழுது, எபேசியர் புத்தகத்தில், பவுலின் கடிதத்தின் ஒரு பகுதியை நான் வாசிக்கப் போகிறேன். நாம் எவ்வளவு தூரம் செல்கிறோம் என்று தெரியவில்லை, ஏனென்றால் இந்த கை கடிகாரத்தைக் கொண்டு எனக்குத் தானே நேரத்தை நான் குறித்துக் கொள்கிறேன்.
தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல்,
ஒரு அப்போஸ்தலன்: அப்போஸ்தலன் என்ற வார்த்தைக்கு, ''அனுப்பப்பட்டவன்…'' என்று பொருள். தான் ஒருமிஷனரி என்று அழைக்கப்பட வேண்டுமென்று, ஏன் ஒரு மிஷனரி விரும்புகிறார்? என்று அடிக்கடி வியந்ததுண்டு. மிஷனரி என்பவர் ஒரு அப்போஸ்தலன். மிஷனரி என்ற வார்த்தைக்கு ''அனுப்பப்பட்டவன்…'' என்று பொருள். அப்போஸ்தலன் என்றாலும் ''அனுப்பப்பட்டவன்…'' என்று பொருள். ஒரு மிஷனரி என்பவன் அப்போஸ்தலன் ஆவான்.
17இனி அப்போஸ்தலர்கள் கிடையாது என்று கூறிக்கொண்டு அதே சபையானது மிஷனரிகளை அனுப்பி அப்போஸ்தலர்கள் இல்லை எனக் கூறகிறது. எனக்கு அது புரியவில்லை. ஆனால் அப்போஸ்தலன் என்றால், ''அனுப்பப்பட்டவன்…'' ஆவான், அதேவிதமாகத்தான் மிஷனரி என்பவரும் ''அனுப்பப்பட்ட ஒருவராக…'' தேவனால் அனுப்பப்பட்டவராக இருக்கிறார். பவுல் விரும்பினதினாலே அல்ல, தெரிந்து கொண்டதினாலே அல்ல, மனிதனுடைய சித்தத்தினாலேயோ அல்லது அவனுடைய சொந்த மானிட விருப்பத்தினாலேயோ அல்ல, ஆனால் தேவனுடைய சித்தத்தினாலே அவன் ஒரு அப்போஸ்தலனாக ஆனான். அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் அதிகமாக நமக்கு தேவை.
தேவனுடைய சித்தத்தினாலே... அவன் கைது செய்வதற்காக தமஸ்குவிற்குப் போகிற வழியிலே சென்று கொண்டிருந்தான், அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். எந்த கூட்டத்திற்கு அப்போஸ்தலனாக இருக்க அனுப்பப்பட்டானோ, அதே மக்களை கைது செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தான். இப்பொழுது, தேவன் காரியங்களைச் செய்வது, மனிதத் தன்மையில் பார்ப்பதற்கு எவ்வளவு தலைகீழாக இருக்கிறது என்பதை நீங்கள் காணலாம். நீங்கள் செய்ய மறுத்த அதே காரியத்தையே ஒருவேளை நீங்கள் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.
18ஒரு இரவில் முழு சுவிசேஷ மக்களை முதன் முறையாக நான் கண்டபோது, நான் ஒரு பெண்ணைக் கண்டேன், இசையானது இசைக்கப்பட்டபோது அவள் தரையிலே எழுந்து நின்று மேலும் கீழுமாக நடனமாடத் துவங்கினாள். என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நடனம் ஆடியதில்லை, நடனமாடும் இடத்தில் நான் இருந்ததுமில்லை, மற்றும் நடனத்தில் எதையும் நான் நம்பியதும் இல்லை.
நல்லது, இது சுத்தமாக சுயநலம் இல்லாமல், ஆனால் என் மனதிலே நான் அந்தப் பெண்ணை குறை கூறினேன். ''அதில் தேவனைக் குறித்த காரியம் அங்கே ஒன்றும்இல்லை“, என்றேன். வாலிப பாப்டிஸ்ட் பிரசங்கியாக அங்கே அமர்ந்துக் கொண்டு, ''அங்கே தரையில் நிற்கும் அந்த ஸ்திரீ, அதில் எதுவுமே இருக்க முடியாது. யாராவது தன்னைப் பார்க்க வேண்டும் என்று அவள் அங்கே ஒரு காட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டேன். நான் அதை சத்தமாக வெளியே சொல்லாமல் ஆனால் என்னுடைய இருதயத்திலே அவ்வாறு நினைத்துக் கொண்டிருந்தேன்.
19அவர்களில் சிலர், ''அந்த கூட்டத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்“ என்று கேட்டனர்.
''அது நன்றாக இருந்தது“ என்று நான் சொன்னேன். ஆனால் என் இருதயத்திலே நான் அதை விசுவாசிக்கவில்லை.
ஆகவே, உங்களுக்குத் தெரியுமா, ஒரு புதிய வருட இரவிலே, என்னுடைய சொந்த கூடாரத்திலே நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்பொழுது, ''ஆகாயத்தில் ஒரு கூடுகை இருக்கப் போகிறது“ என்ற பாடலை இசைக்கத் தொடங்கினார்கள். என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அதே காரியத்தைச் செய்தேன். ஏனென்று நீங்கள் பாருங்கள். ஆகவே, செய்யமாட்டீர்கள் என்று நீங்கள் கூறிய அதே காரியத்தையே சில நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியதாய் இருக்கும்.
மற்ற சில மக்கள் செய்வதைப் போல, கூச்சலிட்டு சத்தமிடுவதைப் போன்ற புழுதியில் ஒருபோதும் நான் இருக்க மாட்டேன் என பவுல் சொல்லியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவன் அதைச் செய்தாக வேண்டும் என்று தேவன் காண்பித்தார். ஆகவே, நான் எதையும் செய்ய மாட்டேன் என்று சில வேளைகளில் நீங்கள் கூறும்பொழுது ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் அதைச் செய்யும்படி தேவன் செய்யக்கூடும்.
சரி, அவன் தேவனுடைய சித்தத்தினாலே அப்போஸ்தலனாயிருந்தான். அவனுக்கு அந்த காரியத்தில் விருப்பம் இல்லை; தேவன் அதைச் செய்தார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவனை அப்போஸ்தலனாக்கினார்.
...பரிசுத்தவான்களுக்கு தேவனுடைய சித்தத்தினாலே
கவனியுங்கள் இப்பொழுது இது பாவிகளுக்கோ அவிசுவாசிகளுக்கோ எழுதப்படவில்லை. இது பரிசுத்தவான்களுக்கு, அல்லது பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. பரிசுத்தமாக்கப்படுதல் என்ற வார்த்தையின் அர்த்தத்தை எழுதுங்கள், ''சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக பிரித்தெடுக்கப்பட்டு“ என்பதாகும்.
20பழைய ஏற்பாட்டில்... அது ஒரு கூட்டு வார்த்தையாக உள்ளது: அது ''சுத்தம்“ என்று மட்டும் குறிக்காமல் ''சேவைக்காக பிரித்து வைத்தல்” என்றும் அர்த்தம் கொள்ளும். பாருங்கள், அது சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக பிரித்து வைக்கப்படுதல் என்பதாகும். பாத்திரத்தை பலிபீடமானது பரிசுத்தப்படுத்தி அவர் அதை சேவைக்காக பிரித்து வைத்துள்ளார்.
...எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு...
அவன் அதை யாருக்கு எழுதுகிறான் என்று பாருங்கள்? நான் அதை வாசிக்கட்டும். அமைதியாக இப்பொழுது கவனியுங்கள்,
தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிறவர்களுக்கு எழுதுகிறதாவது... கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிறவர்களுக்கு:
21இப்பொழுது, இந்த கடிதமானது அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது, வெளி உலகத்திற்கு அல்ல... அது ஒரு செய்தியளிப்பது அல்ல. பவுல் இங்கே இரட்சிக்கப்படாதவர்களுக்கு பிரசங்கிக்கவில்லை. இரட்சிக்கப்பட்டவர்களுக்கு, வெளியே அழைக்கப்பட்டவர்களுக்கு, பிரித்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பிரித்து வைக்கப்பட்டவர்களுக்கு, அழைப்பில் விசுவாசமுள்ளவர்களுக்கு அவன் அதைப் பிரசங்கித்தான்.
இப்பொழுது, இயேசுவுக்குள்... அவர்களுக்குத் தான் அவன் இந்த கடிதத்தை எழுதினான். விசுவாசியின் நிலை கிறிஸ்துவுக்குள் உள்ளது, கிறிஸ்து விசுவாசியை மட்டும்தான் சந்திப்பார். விசுவாசி கிறிஸ்துவுக்குள் தனது நிலையிலே பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே, கிறிஸ்துவை ஆராதிக்க முடியும்.
நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களென்று நான் நம்பவில்லை. நான் வேறு வழியில் சொல்லட்டும். பாருங்கள், ஒரு விசுவாசியால் ஆராதிக்க முடியாது, ஆராதிக்க அவனுக்கு எந்த உரிமையும் இல்லை... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு வெளியே இருந்து கொண்டு, தேவனை ஆராதிக்க எந்த மனிதனுக்கும் எந்த உரிமையும் இல்லை. அது உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக் குறித்து பிரமாணங்களை எடுத்துப் பார்க்க நமக்கு நேரம் இருந்தால் அது மிகவும் அருமையாயிருக்கும். அவன் (பவுல்) கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளுக்கு அதை எழுதுகிறான்.
22கடந்த மாலையிலே நான் இரத்தத்தைக் குறித்து பேசியபோது எவ்வாறு அந்த தேவன் கன்னியின் கர்ப்பத்தில் வந்தார் என்று பேசினேன். அந்த சிருஷ்டிகர் தனக்காக ஒரு இரத்த அணுவை உருவாக்கினார். அந்த அணுவானது அழுத்தத் துவங்கி, இரத்த அணு உடைக்கப்பட்டதன் மூலமாக தெளிக்கப்பட்டு, இடையே இருந்ததை உடைத்து (broke the; case between)... திரையை இரண்டாகக் கிழித்தது; அவைகள் அவரை வெளியே வரும்படி செய்தன.(they cased Him off) இப்பொழுது விசுவாசிகளை அவரோடு ஐக்கியம் கொள்ளும்படியாக உள்ளே கொண்டு வர இயலும்; அது இரத்தத்தின் மூலமாக மட்டுமே.
இரத்தத்தின் மூலமாக வராதவர்களுக்கு அவரைத் தொழுது கொள்ள எந்த ஒரு உரிமையும் கிடையாது. பழைய ஏற்பாட்டிலே பாருங்கள், அங்கு விசுவாசிகள்... அவர்களுக்கு ஒரு கூடாரம் இருந்தது. அந்த கூடாரத்திற்கு அவன் வராத நிலையில் எந்த ஒரு மனிதனுக்கும் கூடாரத்தில் ஆராதனை செய்ய உரிமையில்லை.
23அதுதான் இரத்தம் (பலியாக) செலுத்தப்பட்ட இடம்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவநிவாரணம் இல்லை. இரத்தத்திற்கு வெளியே ஜெபம் பதிலளிக்கப்படும் என்று எந்த வாக்குத்தத்தமும் இல்லை. அனைத்து விசுவாசிகளும் ஒரே ஐக்கியத்தில் ஒன்று கூடி வரும்படியாக தேவனால் நியமிக்கப்பட்ட இடத்திலே அந்த ஆலயத்திற்கு இஸ்ரவேல் புத்திரர் வந்தார்கள். இதைப் பார்க்கிறீர்களா?
அனைத்து அவர்கள்: பரிசேயர், சதுசேயர், ஏரோதியர், ஆயக்காரர் ஐக்கியம் கொள்ளும் ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடி வந்தனர். என்னே அழகு: ஏனென்றால் அங்கே... ஏன்? செம்மறி ஆட்டுக் குட்டியானது கொல்லப்பட்டு, வெண்கல பலிபீடத்தில் இரத்தமானது ஊற்றப்பட்டு உடல்கள் சுட்டெரிக்கப்பட்டது. அந்த தூபமானது மேலே எழும்பி, தூபத்தின் கீழிருந்த அனைவரும், அந்த தூபம் அந்த இடத்தை விட்டு எழும்பியபோது அது அவருடைய நாசிக்கு சுகந்த நறுமணமாக இருந்தது. இரத்தத்தின் கீழாக இருந்த அனைவருக்கும் ஆராதனை செய்ய உரிமை இருந்தது.
24அது எதைக் குறித்துக் கூறுகிறது? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை. அதன் பின்பு தேவனாக, அக்கினி ஸ்தம்பத்தில் அவருடைய ஆலயத்திற்கு வந்தார். அந்த ஆலயமானது எல்லா இஸ்ரவேலரும் ஒன்றாகக் கூடி வரும்படியாக; ஆராதனை ஸ்தலமாககட்டப்பட்ட போது, அக்கினி ஸ்தம்பமானது தூதர்களின் மகத்தான எழுபது அடி செட்டைகளிடம் உள்ளே வந்து, தூதர்களோடு கூட சுவர்களின் அருகே திரும்பிச் சென்று, இரண்டு மகத்தான பதினான்கு அடி வெண்கல கேருபீன்கள் தங்களது செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்து இருக்கிற இடத்தில் உள்ள கிருபாசனத்திற்கு திரும்பி வந்து அமர்ந்தது.
வெளியே இரத்தமானது பிராயச்சித்தமாக செலுத்தப்பட்ட தம்முடைய ஆலயத்திலே ஆராதிக்கப்படுவதற்காக தேவன் வந்தார். அங்கு கிறிஸ்து பூமிக்கு வந்தபொழுது... செம்மறி ஆட்டுக்குட்டியானது வெண்கலத் தொட்டியில் கழுவப்படுவது போல, அவர் யோர்தானில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது; கவனியுங்கள், தேவ ஆவியானவர் புறாவைப் போல மேலிருந்து வந்து அவர்மேல் அமர்ந்து அவருக்குள் சென்றதைப் பார்த்த யோவான் சாட்சி கொடுத்தான். 'தேவன் தம்முடைய ஆலயத்திற்கு வருதல்…', என்பதாகும்.
25தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தமக்குள் ஒப்புரவாக்கினார். அவரே அவருக்கு ஆலயமாக இருந்தார். பிறகு அந்த சரீரமானது பாவத்திற்காக, நம்முடைய பாவங்களுக்காக கிழிக்கப்பட்டது. அவருடைய மாம்சமானது இரண்டாக பிளக்கப்பட்டது, இரத்த நாளங்கள் உடைக்கப்பட்டன, அங்கே இப்போது, அவருடைய சரீரத்திலிருந்து ஆவியானது வெளி வந்தபோது, எல்லா விசுவாசிகளும்... நீங்கள் அதைக் காண்கிறீர்கள் என்று நம்புகிறேன். பாருங்கள், இரத்தத்தின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக வந்த எல்லா விசுவாசிகளும் கிறிஸ்துவில் தங்களது நிலையிலே பொருத்தப்படும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக தேவனைத் தொழுது கொள்வார்கள். நீங்கள் அதைக் காண்கிறீர்களா?
கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு, கிறிஸ்துவுக்குள் விசுவாசமுள்ள, அழைக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பவுல் இந்த கடிதத்தை அவர்களுக்கே எழுதுகிறார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பதற்காக இன்று மகிழ்ச்சியாயில்லையா?
26நாம் எவ்வாறு உள்ளே செல்லுவது? அதற்கு நமக்கு நேரமிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இன்னும் ஆறு நிமிடங்களே உள்ளது. பாருங்கள், நாம் கிறிஸ்துவுக்குள் செல்லுவது ஒரே ஆவியின் மூலம். ஒரே ஐக்கியத்தினால் அல்ல, இல்லை, இல்லை... முதல் காரியம் முதலாவதாக வருகிறது. ஒரே சபையின் மூலமாகவா? இல்லை. ஒரு கடிதத்தின் மூலமாகவா?இல்லை. ஒரே கோட்பாட்டின் மூலமாகவா? இல்லை. ஆனால் ஒரே ஆவியின் மூலமாக. நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். ''தண்ணீரினால் அல்ல, பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்'', என்று கர்த்தர் உரைக்கிறார். ஒரே ஆவியினால் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். என்ன? ஆவியினால். ஆவியானது எங்கே தங்கியுள்ளது? ஜீவன் எங்கே இருக்கிறது? இரத்தத்தில்; கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக வருகிறது.
27முதலாவது விசுவாசியாக மாறுதல், கிறிஸ்துவுக்கு வெளியே, தேவன் இல்லாமல், நம்பிக்கையில்லாமல், இந்த உலகத்திலே சாவுக்கேதுவாக நியாயந்தீர்க்கப்பட்டிருந்தோம். பிறகு, தேவன் கிருபையினாலே நம்மைத் தெரிந்து கொண்டு கிறிஸ்துவண்டைக்கு அழைத்தார். இரத்த அணுக்களுக்குள்ளிருந்து, அவர் நம்மை அழைப்பதை நம்மால் கேட்க முடிகிறது. ஜீவன், உங்களுக்கு அது புரிகிறதா? பிறகு நாம் வந்து நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து, நம்முடைய பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறுகிறோம்.
பிறகு, இரத்தத்தின் மூலமாக எடுக்கப்பட்டு இரத்த அணுவானது... இரத்தம் தெளிக்கப்பட்டதன் மூலமாக நாம் வருகிறோம். பிறகு, பரிசுத்த ஆவியின் மூலமாக இந்த இரத்த அணுவின் உள்ளே ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்கிறோம். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், எல்லா அநியாயத்திலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது. ஓ, என்னே; அதுதான் காரியம்.
உரிய நிலையில் இருப்பது; அதுதான் நமக்கு வேண்டியதாகவுள்ளது. சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக முதலாவது கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள். பிறகு உரிய நிலையில் கிறிஸ்துவுக்குள் அமர்த்தப்படுவோம்.
28இப்பொழுது, அடுத்த வசனத்தை கவனியுங்கள். முதலாவது, நாம் அதைக் கடந்து போவதற்கு முன்பாக, கவனியுங்கள், பழைய ஏற்பாடு முழுவதும் புதிய ஏற்பாட்டின் நிழலாக உள்ளது. ஆலயத்திற்கு வெளியே தொழுது கொண்டு பலிசெலுத்த எந்த ஒரு விசுவாசிக்கும் உரிமை இல்லை. ஆலயத்திற்கு உள்ளே தான் இரத்தம் இருந்தது. தேவன் அதைத் தடுத்து, ''அதை செய்யாதிருங்கள். ஐக்கியம் கொள்வதற்கு ஆலயத்திற்கு வாருங்கள்“ என்று கூறினார்.
நாம் வெளியே சென்று சமய கோட்பாடுகளையோ ஸ்தாபனங்களையோ உருவாக்கவும், ஜனங்களை உடைத்து அவர்களைப் பிரிக்கவும் நமக்கு எந்தவித உரிமையும் இல்லை. நாம் அனைவரும் ஒரே மகிமையான ஐக்கியத்திற்குள் வர வேண்டியவர்களாக இருக்கிறோம். வார்த்தையின், தண்ணீரினாலே கழுவப்படுதலினால், இரத்தத்தின் மூலமாக கிறிஸ்துவின் சரீரத்திற்கு உள்ளாக வரவேண்டும். பிறகு நாம் இரத்தத்தால் வாங்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம்.
அதன் பின், ''நீ மெத்தோடிஸ்டாக இருப்பதால், நீ என்னுடைய சகோதரன் இல்லை, நீ பாப்டிஸ்டு ஆனதால் என்னுடைய சகோதரன் இல்லை அல்லது நீ பெந்தெகொஸ்தேயினனாக இருப்பதால், என்னுடைய சகோதரன் அல்ல“ என்று கூற எனக்கு எந்த உரிமையும் கிடையாது. நாம் இரத்தத்தின் மூலம் வந்து, இந்த ஒரே ஐக்கியத்தில் பங்குபெற நாம் அனைவரும் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.
அதன் பின் நாம் எவ்வகையான இடங்களில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம்?உன்னதங்களிலே. எவ்வாறு? கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே, உன்னதங்களிலே.
29நீங்கள் கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் போது உன்னதமான இடத்தைக் குறித்து நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்கள். நீங்கள் அங்கே வெளியே நின்று பார்த்து, ''ஓ, அது ஒரு கூட்ட மதவெறியர்கள், அவர்கள் எதைக் குறித்துப் பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது“, என்று கூறுவீர்கள்.
உங்களுக்குத் தெரியாத காரணம் என்னவென்றால் நீங்கள் ஒருபோதும் அவருடைய பாடுகளின் ஐக்கியத்திலே பங்காளிகளாக இருக்கவில்லை. நீங்கள் ஒருபோதும் உங்களது கரங்களை அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான தலையின் மேல் வைத்து, உங்களது பாவங்களுக்காக கல்வாரியின் வலியை நீங்கள் ஒருபோதும் உணர்ந்து கொள்ளவில்லை. அது என்னவென்று உனக்கு ஒருபோதும் தெரியாது என் சக நண்பனே.
கல்வாரிக்கு ஏறிச் சென்று உங்களுக்காக எவ்விதம் கிரயம் செலுத்தப்பட்டது என்று பார்க்கும் வரை. அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியாது. பிறகு, நீங்கள் அது எதைக் குறித்ததென்று உணர்ந்து கொள்ளும்போது, தேவன் கிருபையினால் இரத்த ஓட்டத்தின் மூலம் அவருடைய நேச குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் தனது சொந்த ஐக்கியத்திற்குள்ளே. உங்களைக் கொண்டு சென்றதை அறிவீர்கள்.
30ஓ, என்னே அற்புதம்; கிறிஸ்துவுக்குள் அவருடைய அற்புதமான ஐக்கியத்திற்குள்ளாக வர நாம் சிலாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம் என்பதை அறிவது எனக்கு மிகவும் நன்றாக உள்ளது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இப்பொழுது, நீங்கள் ஐக்கியத்திற்குள் இருக்கும்போது; கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கும் நண்பனே, ஐக்கியத்திற்கு வெளியில் இருந்து கொண்டு, இந்த ஐக்கியத்தில் இருக்கும் இயற்கைக்கு மேம்பட்டதில் விசுவாசம் கொண்டிருக்கும் மக்களை அவர்கள் எல்லோரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற உனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனென்றால் கர்த்தர் நல்லவர் என்பதை ஒருபோதும் ருசித்துப் பார்த்ததில்லை. இதனூடாக இந்த ஐக்கியத்திற்குள்ளாக ஒருபோதும் வந்ததில்லை.
31ஓ, நீங்கள் இதை விசுவாசிக்கலாம், நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளலாம், ''ஆமாம், வேதாகமம் சரியானது என்று நான் விசுவாசிக்கின்றேன் என்றும், நான் தேவ ஆலயத்திற்கும் கூடச் செல்கிறேன்“ என்றும் நீங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் எப்பொழுதாவது உங்களுக்கு நீங்களே மரித்து மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?வெளிப் பிரகாரமான காரியங்கள் எல்லாவற்றையும் விட்டு, இரத்தத்தின் மூலமாக இந்த ஐக்கியத்திற்குள் கொண்டு வரப்பட்டு கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களிலே உட்கார்ந்ததுண்டா? தேவனால் என்ன செய்யக் கூடும்‚
நாம் எல்லோரும் இந்த ஒரே ஐக்கியத்தில் பங்கு பெறுகிறவர்களாக இருக்கும்போது, பார்வையாளர்கள் மத்தியில் தேவனுடைய வெளிப்பாடானது எப்படியாக அசைந்து செல்லும் பாருங்கள்‚
இப்பொழுது, அவர்களுக்குத்தான் பவுல் இந்த கடிதத்தை எழுதுகிறான்.(சற்று பொறுங்கள்) கிறிஸ்து இயேசுவிற்குள் இருக்கிறவர்களுக்கு பவுல் இந்த கடிதத்தை எழுதுகிறான். உங்களுக்குத் தெரியுமா‚ விசுவாசிகளாயிருக்கிறவர்களுக்கு...நாம் எவ்விதம் உள்ளே வருகிறோம் என்று பாருங்கள்? வெளியே உள்ள ஒருவருக்கும்; இரத்தத்தின் மூலமாக வராத ஒருவருக்கும் உள்ளே வர உரிமை இல்லை.
ஓ, ''நான் இரத்தத்தின் மூலமாகவே“ என்று அவன் கூறுகிறான். அவன் சரியாக அங்கேயே உட்கார்ந்து கொண்டு, ''நான் இந்த காரியங்களைப் பெறவில்லை”, என்கிறான். நிச்சயமாக இல்லை. அவன் இரத்தத்தின் மூலமாக வந்ததாக பாவனை செய்கிறான்.
32ஆனால் எப்பொழுதாவது அவன் குமாரனாகவும் பங்காளியாகவும் ஆகும் போது, அவன் உங்கள் சகோதரன் ஆகிறான். அவன்... அவன் என்னவாயிருக்கிறான்? கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியானவர் உங்களுக்குள்ளும் அவனுக்குள்ளும் இருக்கிறார். நீங்கள் சக குடியுரிமையாளர்களாக இருக்கிறீர்கள். ஓ, என்னே‚ அந்த வார்த்தையே எனக்கு விருப்பம். நான் அரைமணி நேரமாக அந்த வார்த்தையைப் பெற முயன்றேன். ஆவிக்குரிய இராஜ்ஜியத்தின் சக குடியுரிமையாளர். குடியுரிமம்: இந்த இராத்திரி வேளையிலே நீங்கள் அதைப் பெற்றிருப்பதால் மகிழ்ச்சியாக இல்லையா? என்றோ ஒரு நாளில் அந்த இராஜா வருவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேவனுடைய இராஜ்ஜியத்தின் சக குடியுரிமையாளர்களாக இருப்பதில்.
இப்பொழுது, நாம் சற்று துரிதப்படுவோம்.
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
அவர் இந்த வாழ்த்துதலை அளிக்கிறார்... அல்லது, சபைக்கு அவருடைய வாழ்த்துதல்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்... ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
அதை நினைத்துப் பாருங்கள்.
33ஆவிக்குரிய ஆசீர்வாதங்களான ஐக்கியம், பரிசுத்த ஆவி போன்றவை பெந்தெகொஸ்தே அன்று மட்டுமே வரும் என்று நான் நினைத்திருந்தேன். இது முப்பத்து இரண்டு வருடங்களுக்கு பிறகும் அது புறஜாதி சபையாகிய எபேசு சபையை ஆசீர்வதிக்கிறது. உன்னதங்களில் நம்மை ஆசீர்வதித்தல். நீங்கள் கிறிஸ்து இயேசுவிற்குள் இருக்கும் போது மட்டுமே உன்னதங்களில் இருக்கமுடியும்.
ஆகையால் பரிசுத்த ஆவியானவர் அப்பொழுது அவர்களை உன்னதங்களிலே ஞானஸ்நானம் செய்திருப்பார் என்றால் இப்பொழுதும் அவர்களுக்கு உன்னதங்களிலே ஞானஸ்நானம் அளிப்பார். அதே ஐக்கியம். இப்பொழுது, கிறிஸ்துவுக்குள்ளாக உன்னதங்களிலே. இப்பொழுது துரிதமாக, நான் உங்களுக்கு என்னுடைய கண்ணோட்டத்தை அளித்துவிட்டு பிறகு நாம் செல்லலாம்.
34அவர்... தேவன், அவர் நம்மைத் தெரிந்து கொண்டபடியே...
என்னுடைய விருப்பத்தினால் அல்ல, உங்களுடைய விருப்பத்தினால் அல்ல, பவுலினுடைய விருப்பத்தினாலும் அல்ல, ஆனால்...
உலகத்தோற்றத்துக்கு முன்னே அவருக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்...
நீங்கள் அதைக் குறித்து நினைத்ததுண்டா? நாம்... அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே அவருக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார் நாம் பரிசுத்தமுள்ளவர்களாயிருப்பதற்கு...
நான் சரியாக ஜீவித்தேன் என்பதனால் அல்ல; ஏனென்றால் நான் அவ்விதமாக இருக்கவேண்டும் என்று அவர் என்னைத் தெரிந்தெடுத்தார். அவர் அதைச் செய்தார், நான் அல்ல.
35அந்த காரணத்தினால் தான் இந்த பிற்பகலிலே நீங்கள் பரிசுத்தமாக இருக்கிறீர்கள், நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதனால் அல்ல, ஆனால் நீங்கள் அவ்விதமாக இருக்கும்படியாக அவர் உங்களைத் தெரிந்துக் கொண்டார். எப்பொழுது? உலகத் தோற்றத்திற்குமுன்னே...
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு:
நம்மால் அதை எவ்வாறு செய்யக் கூடும்? அதைச் செய்வதற்கு ஒரு சிறந்த வேலைப்பாடு இருக்க வேண்டியதாயிருந்தது, அதுதான் கிறிஸ்து இயேசு.
கவனியுங்கள், உங்களுக்கு அது நினைவில் இல்லை. எனக்கும் நினைவில் இல்லை, ஆனால், தேவன் மனிதனை உண்டாக்கியபோது, ''நமது சாயலாக மனிதனை உருவாக்குவோமாக, அவர்களுக்கு (பன்மை) அளிப்போம்; நமது சாயலாக மனுஷனை, ஆவி மனிதனை உருவாக்கி, சமுத்திரத்தில் மச்சங்களையும், மிருக ஜீவன்கள் மற்றும் எல்லாவற்றின் மேலும் ஆளுகையை அவர்களுக்கு அளிப்போமாக“, என்று கூறினதற்கு முன்னே உலக தோற்றத்திற்கு முன்னே நாம் இருந்தோம். ஆதியாகமம் ஒன்று.
36''நாம் மனிதனை உண்டாக்குவோமாக“, என்று தேவன் சொன்னார். இப்பொழுது, கடைசி காலத்தில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக தோன்றுவதற்கு, தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைத் தெரிந்து கொண்டார்; உலகத் தோற்றத்திற்கு முன்னிருந்து: நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா?
இப்பொழுது வேகமாக, நாம் அடுத்த வார்த்தையைப் பார்ப்போம்.
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை கிறிஸ்து இயேசு மூலமாய் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார். (அல்லது தெரிந்தெடுத்தார்).
37சற்று நேரம் நான் உங்களிடத்தில் பேசலாமா? உலகத்தோற்றத்திற்கு முன்பாக தேவன்... கவனியுங்கள், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்“ என்று இயேசு கூறினார். அது இயேசுவின் சொந்த வார்த்தை. இதோ இரத்த அணுவானது உடைக்கப்பட்டு, தெளிக்கப்படும்போது இரத்தம் அசைகிறது.
இப்பொழுது, இந்த இரத்த அணுவிற்குள் கிறிஸ்து இருக்கிறார், கிறிஸ்து என்றால் ''அபிஷேகம் செய்யப்பட்டவர்“ என்று அர்த்தம். அது அபிஷேகம் செய்யப்பட்ட இரத்த அணுவாக இருக்கிறது; இங்கே அது இருக்கிறது. இதோ நம்முடைய பிதாவாகிய தேவன். அவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் இந்த தெளிக்கப்படும் இரத்தத்தின் மூலமாக என்னிடத்தில் வரமாட்டான். வருகிற அனைவருக்கும், நான் நித்திய ஜீவனை அளிப்பேன், எந்த அறிவாளியும் அவனைத் தள்ளிவிட (வெளியேற்ற) முடியாது, கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்”. அது என்ன என்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?
38இப்பொழுது பாருங்கள். அவர் இந்த நோக்கத்திற்காக நம்மைத் தெரிந்து கொண்டு முன் குறித்திருக்கிறார் (அல்லது முன்னறிந்திருக்கிறார். அது என்னவாக இருக்கும் என்று ஆதியிலேயே அவர் முன்னறிந்திருந்தார்). அவர் கடைசி காலத்திலே என்ன செய்வார் என்பதை அறிந்து, ஆதியிலே தேவன் முன்குறித்தார், அல்லது அது என்னவாயிருக்கும் என்று முன் கூட்டியே கூற முடிந்தது - முன்னறிதல், கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் என்பதை முன்னாகத் தெரிந்துக் கொள்ளுதல்
கவனியுங்கள், சுவிகார புத்திரராகும்படி. நம்மை முன்குறித்திருக்கிறார். நம்மை புத்திரசுவிகாரம் செய்தார்... இப்பொழுது மறுபடியுமாக நாம் பழைய நியாயபிரமாணத்தை சற்று நேரம் பார்த்து பிறகு நாம் முடிக்கலாம்.
39பழைய ஏற்பாட்டில், ஒரு மனிதன்... வார்த்தையை வாசிப்பதை நீங்கள் களி கூருகிறீர்களா? நான் அதை நேசிக்கிறேன். சில நிமிடங்கள் நீண்டு செல்வதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாட்டில், ஒரு மனிதன் தன்னுடைய சிறிய இராஜ்ஜியத்தைப் பெற்றிருக்கும்போது, இப்பொழுது, சிறிய உடைமையாகிய இந்த இராஜ்ஜியத்தின் தந்தை அவன் தான்... பரிசுத்த யோவான் எழுதிய புத்தகத்திலே, ஜேம்ஸ் அரசனின் மொழிபெயர்ப்பு அல்லது பதிப்பிலும் கூட சில வருடங்களுக்கு முன்புவரை பிரிட்டனில் ஆங்கிலோ சாக்ஸன் மக்கள் மத்தியில் அது பின்பற்றப்பட்டு வந்தது.
பரி. யோவான் 14-ம் அதிகாரத்தில், ''என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு“ என்று கூறுவதைக் காணலாம். அது விசித்திரமாக தொனிக்கிறது. வீட்டில் வாசஸ்தலங்கள். ஆனால் அது என்ன ஜேம்ஸ் அரசனின் பதிப்பு மொழி பெயர்ப்பின் நாட்களிலே இராஜ்ஜியத்தைப் பெற்றிருந்த ஒவ்வொரு இராஜாவும் அவனுடைய அதிகார எல்லையைப் பெற்றிருந்தான். அவன் தகப்பன் என்று அழைக்கப்பட்டான், அவனுடைய குடும்பத்தார் எனப்பட்டவர்கள் - பிள்ளைகளாகும்.
அவனுடைய எல்லா பிரஜைகளும் அவனுடைய... அவனுடைய ஆளுகையில் இருந்தனர், அதுவே அவனுடைய வீடு என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் அவர்கள், ''என் பிதாவின்...'' என்று கூறினார்கள். இப்பொழுது மொபட் என்பவர் இதை ''என் பிதாவின் அடுக்கு மாடி குடியிருப்பிலே அநேக குடியிருப்புகள் உண்டு…'' என்று கூறுகிறார் என நம்புகிறேன். நான் அதை ஒப்புக் கொள்ளமாட்டேன். ஆனால் மூலபதிப்பிலே ''என் பிதாவின் இராஜ்ஜியத்திலே அநேக மாளிகைகள் உண்டு“ என கூறப்பட்டுள்ளது. அது இன்னும் சற்று நன்றாக உள்ளது, இல்லையா? அது சரியே.
இப்பொழுது ஒரு மனிதன்... பழைய ஏற்பாட்டிலே பாலஸ்தீனாவில் உள்ள ஒரு யூத மனிதன்... அங்கே... அவன் என்னவாக இருந்தானோ யோசேப்பின் கோத்திரம் அல்லது எப்பிராயீம் அல்லது அது என்னவாக இருந்தாலும் அவனுக்கு சொந்தமான சீட்டுப் போடப்பட்ட நிலங்களைக் கொண்டிருந்தான்.
40நகோமியோடு ரூத் திரும்பி வரும் அந்த அழகானகதை, நகோமி அவளுடைய எல்லா சுதந்திர வீதத்தையும் இழந்தபோது போவாஸ் அதை திருப்பிக் கொண்டு வந்தான். நான் கடந்த முறை இங்கே இருந்தபொழுது அதைக் குறித்து நான் பிரசங்கித்தேன் என்று நம்புகிறேன். ஒரு அழகான சித்தரிப்பு. அதுதானே அவனுடைய சிறிய அதிகார எல்லையாக, சிறிய இராஜ்ஜியமாக அவனுடைய உடைமையாக இருந்தது. அது ஒருவருக்கு பின் மற்றவருக்கு கையளிக்கப்பட்டது.
இப்பொழுது, ஒரு தகப்பன்... கல்யாணம் செய்யும் போது... தகப்பன் எதைக் கொண்டிருந்தாரோ அதை இந்த மகன் சுதந்தரித்துக் கொள்கிறான், அவனுக்கு பிள்ளைகள் பிறந்தனர். இப்பொழுது, இந்த சிறுவன் இந்த இடத்தில் பிறந்தபோது (நாங்கள் அதை சிறிய நிலப்பரப்பு அல்லது சிறிய பண்ணை என்று அழைப்போம்) அவன் அங்கே பிறந்தபொழுது, அந்த தகப்பனுக்கு ஊழியக்காரர் சுற்றிலும் இருந்தார்கள், ஆனால், அந்த பிள்ளை காரியக்காரர், ஆசிரியர், போதனையாளரின் கீழ் வளர்க்கப்பட்டான்.
41கலாத்தியர் நான்காம் அதிகாரம் ஒன்றிலிருந்து ஐந்து வசனங்கள் நாம் இவ்வளவு காலமாக எவ்வாறு காரியக்காரர்களின் (உபாத்தியாயர்) கீழ் இருந்தோம் என்பதைக் குறித்து அழகாக சித்தரிக்கிறது.
ஆனால் இப்பொழுது, இந்த பிள்ளையானது பிறந்த பொழுது அவன் அந்தக் குடும்பத்தில் பிறந்த அந்த கணப்பொழுதே அவன் குமாரனானான். உங்களுக்கு அது புரிகிறதா?
இப்பொழுது, இந்த சிறு பையனுக்கு கற்பிக்கவும், அவனை வளர்க்கவும் அவன் மேலாக ஒரு காரியக்காரன் இருந்தான், நல்லது, அவனுக்கு குறிப்பிட்ட வயது வரும் வரை குறிக்கப்பட்ட காலம் வரைக்கும் அவன் ஒரு வேலையாளைக் காட்டிலும் (அடிமையானவனைக் காட்டிலும்) மேலானவன் அல்ல என்று கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த காரியக்காரன் எப்பொழுதும், ''உங்கள் குமாரன் சரியாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்“ என்றோ அல்லது என்னவாயிருந்தாலும் அதை அவன் தந்தைக்கு கூறுவார். இப்பொழுது அங்கே தான்... நான் அதை மறுக்கவில்லை, என் அருமை சகோதரனே, ஆனால், இங்கே இதை உன்னை நேசிப்பவர் கூறுகிறார் என்று எடுத்துக் கொள்.
42பெந்தெகொஸ்தேயினர் அங்குதான் இதைக் காண தவறிவிட்டனர். பாருங்கள். ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் அப்பொழுது அதை தந்தருள சித்தமில்லாதிருந்திருக்கலாம். கவனியுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தபோது, நீங்கள், ''இதுதான் அது சகோதரனே“ என்று கூறுவீர்கள்.
அது நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தீர்கள். நீங்கள் எவ்வளவாக முடியுமோ அவ்வளவாக குழந்தையாயிருந்தீர்கள்; நீங்கள் அந்தக் குடும்பத்தில் பிறந்தீர்கள். ஆனால் இன்னுமாக, பரிசுத்த ஆவியாகிய உபாத்தியாயர் சபையானது முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போது அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
43இப்பொழுது, இயற்கையில் இந்த ஆசிரியர் தகப்பனாரிடம் சென்று, ''இப்பொழுது, இங்கே இந்த பையன் மிகவும் நன்றாக இருக்கப் போவதில்லை நான் அவனுக்கு போதிக்க முற்படுகிறேன். அவன் அதைக் கேட்பதில்லை. அவன் தன்னுடைய சொந்த முரட்டாட்டமான வழியை உடையவனாயிருந்து நான் சொல்வதை கவனிப்பதில்லை. அவன் இவ்வாறு ஆகப் போகிறான், அல்லது அவ்வாறு ஆகப் போகிறான் என்று கூறுவார்.
அந்த பையனால், தனது ஆளுகையை (அதிகாரத்தை) எடுத்துக் கொள்ள முடியாது என்று தகப்பனார் சரியாக அப்போதே உணர்ந்து கொள்வார். அது சரியே. ஏனென்றால் அவன் என்ன செய்வான்? அவன் ஓடிப் போவான். கெட்ட குமாரன் திரும்பி வருதல், இதை மிகவும் அழகாக சித்தரிக்கிறது, பாருங்கள். அவனால் முடியாது. அவன் என்ன செய்வான் என்றால், பண்ணையை அடகு வைக்கவோ அல்லது விற்றுப்போட்டு, குடித்துவிட்டு அங்குமிங்கும் சுற்றித் திரிவான்.
44இப்பொழுது, ஆவிக்குரிய பிரகாரமாக, நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்தபிறகு, நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஆகிறோம். ஆனால் பிறகு, பாருங்கள், தேவன் நன்றாக அறிந்திருக்கிறார். இப்பொழுது இங்கு நான் அதை மரியாதையுடன் கூறுகிறேன், என்னுடைய பின்மாரி சகோதரருடன் ஒத்துப் போவதில்லை. நான் சபையை துன்பப்படுத்துகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, என் அன்பு சகோதரனே, இல்லை, பாருங்கள்.
இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட வயதையடைந்த பிறகு இந்த பிள்ளையானவன் அவன் பிறந்த அதே குடும்பத்தில் புத்திர சுவிகாரம் செய்யப்பட வேண்டும். அதுதான் குமாரனின் நிலையில் பொருத்துவது என்று எந்த ஒரு ஊழியக்காரரும் அறிவார். அவன் பிறந்த அந்தக் குடும்பத்தில் அவன் புத்திரசுவிகாரம் அடைய வேண்டும். அதை உங்களால் சிந்தித்துப் பார்க்க முடிகிறதா? ஆனால் அது பழைய ஏற்பாட்டின் போதனை, பவுல் அதை எபேசுவில் உள்ள சபைக்கு எபேசியர் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.
45இப்பொழுது, அந்தக் காரியம் என்னவென்றால், சகோதரரே, நாங்கள் இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் மேல் கைகளை வைத்து பிரித்தல் அல்லது தனியே பிரித்து வைத்தல் மூலம் ஒவ்வொருவரையும் இதுவாகவும் அதுவாகவும் ஆக்க முயன்றோம். ஆனால் தேவன் தான் அதைச் செய்ய வேண்டியவராக இருக்கிறார். அதைச் செய்யக் கூடியவர் அவர் மட்டுமே.
இப்பொழுது, தன்னுடைய மகன் தகுதியற்றவன் என்று தந்தை உணர்ந்து கொள்ளும்போது, அவர் அவனை ஒருபோதும் தள்ளிவிடவில்லை. அவன் இன்னுமாக அவருடைய பிள்ளையாகவே இருந்தான், ஆனால் அவன் மீது அவர் நம்பிக்கையை வைக்க முடியவில்லை. அவன் போதகமாகிய பலவித காற்றினாலே அடிபட்டு அலைகிறவனாக இருந்தான். ''போதகமாகிய பலவித காற்றினாலே அடிபட்டு அலைகிறவர்களாயிராதிருங்கள், நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் ஸ்திரமானவர்களாயும், கர்த்தருடைய கிரியைகளிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக“, என்று வேத வசனம் சொல்லுகிறது. இதன் பேரில் சீக்கிரமாக நாம் சற்று நேரம் தரித்திருக்க விரும்புகிறேன்.
46ஆனால் கவனியுங்கள், இந்த தகப்பன் பிறகு... இந்த பையன் சரியானவனாகவும், தகுதியுள்ள மனிதனாகவும் ஆன அந்த நாள் வந்தது. அவன் தன் தந்தைக்குச் செவி சாய்த்து, அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டு, ஒரு நல்ல மகனாக மாறினான். பிறகு அந்த தகப்பனார் அவனை வெளியே பொதுவான வீதியிலே கொண்டு வந்து, அவன் மேலாக விசேஷித்த ஆடைகளை அணிவித்தார். பிறகு அந்த தகப்பன் ஒரு விழாவை நடத்தி இந்த தன்னுடைய குமாரனை அவருடைய குடும்பத்திற்குள் சுவிகார புத்திரனாக்கினார்.
பவுல் இங்கே கூறுகிறார், ''சுவிகார புத்திரராகும்படி நம்மை முன் குறித்திருக்கிறார்“, பாருங்கள். சுவிகார புத்திரராகும்படி: மோசே அதற்கு ஒரு முன் அடையாளம். பிறகு, அந்த குமாரன் அங்கே வெளியே வந்த பிறகு, இனி ஒருபோதும்... ஒரு காரியக்காரனின் (உபாத்தியாயரின்) கீழ் வேலைக்காரனைப் போல் இனி ஒருபோதும் இருப்பதில்லை. அவன் எஜமான். ஆமென். இது உண்மையில் ஆழமாகச் செல்கிறது என்று நான் நம்புகிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் உங்களை விடப் போகிறேன்.
47நாம் இன்னும் ஆழமாகச் சொல்லலாம். இந்தக் குமாரன் இனி ஒருபோதும் ஒரு காரியக்காரனின் கீழ் இராமல் அவன் தன்னுடைய தந்தையைப் போல் இருந்தான். அவன் செய்யும்படியாக அவனுடைய தந்தை அவனுக்கு சில காரியங்களைத் தந்தார். ஒருவேளை அவனுடைய தந்தை அவனிடத்தில், ''இங்கிருக்கும் இந்த வயல் வெளியை நீ கவனித்துக் கொள் அல்லது, இங்கே இதைச் செய் நீ இந்த அடிமைகளைப் பார்த்துக் கொள், அது என்னவாயிருந்தாலும் நீ அதை பராமரித்துக் கொள்“ என்று கூறியிருக்கலாம். அவன் முழுவதுக்குமான சுதந்தரவாளியாக இருந்தான். ஆமென்.
அவன் அந்த குடும்பத்தில் சுவிகார புத்திரனாக்கப்பட்டபடியால், காசோலையில் அவனது பெயர் அவனது தந்தையின் பெயரைப் போன்றதாகும். இப்பொழுது தேவன் என்ன செய்தார், நாம் இந்த காரியங்களை பார்ப்பதற்கான காரணம், நண்பனே, அங்கே ஏதோ தவறு உள்ளது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் காண்கிறோம், அதை நாம் தேவனுடைய வார்த்தையில் காண்கிறோம். என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், தற்போது தேவன் தன்னுடைய குமாரர்களை சுவிகார புத்திரராக்கத் துவங்கியிருக்கிறார். ஒரு பக்கமாக, ஒரு ஸ்தானத்தில் அவர்களை வெளியே அழைத்து அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஊழியத்தைக் கொடுத்து, அவர்களை அந்த நோக்கத்திற்காக அபிஷேகம் செய்து, அவர்களை வெளியே அனுப்புகிறார். அவர் அவ்வாறு செய்யும்பொழுது என்ன நிகழ்கிறது என்று கவனியுங்கள்.
48அவர் அவனுக்கு எதன் மேல் உரிமை அளிக்கிறாரோ அவை அனைத்தும் நடைபெறும். தேவன் தமது சொந்த குமாரனை அவ்வாறே சுவிகார புத்திரனாக்கினார். இயேசு, ஒரு சாதாரண மனிதனாக நடந்து சென்றார், ஆனால் ஒருநாள் மறுரூபமலையின் மேல், மூன்று பேரை அவர் சாட்சியாக எடுத்துக் கொண்டார்: பேதுரு, யாக்கோபு, யோவான். நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பு. அவர்களை வெளியே அழைத்தார். அவர்களிலிருந்து அவர் இயேசுவைப் பிரித்தெடுத்து அவர் மேல் நிழலிட்டார் வேதம் கூறுகிறது, ''அவருடைய வஸ்திரம் சூரியனைப் போல அதின் முழு பெலத்தில் பிரகாசித்தது. அது என்ன? அந்த விசேஷித்த சிறந்த அங்கி. தேவன் தமது சொந்த குமாரனை சுவிகார புத்திரனாக்குதல்.
49மோசேயும் எலியாவும் அங்கே தோன்றியதை அவர்கள் கண்டார்கள். பிறகு (தெளிவில்லாத வார்த்தை) அவர்கள் இயேசுவை மட்டும் கண்டார்கள். பிறகு அவர்கள் திரும்பிப் பார்த்தபோது, பிதாவாகிய தேவன் அங்கியை தம்முடைய குமாரனின்மேல் போட்ட பிறகு, ''இவர் என்னுடைய நேசகுமாரன்; இவருக்கு செவிகொடுங்கள்“, என்று கூறினார்.
''வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் என் கையில் கொடுக்கப்பட்டுள்ளது“, என்று இயேசு கூற முடிந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனென்றால் அவர் தம்முடைய பிதாவினால் தேவனுடைய மகிமையான இராஜ்ஜியத்தில் புத்திரனாக்கப்பட்டார்”.
இப்பொழுது, மாட்சிமை பொருந்தியவராய் எல்லா பிரதான தூதர்களுக்கும்; தூதர்களுக்கும் மேலாக வலது பாரிசத்தில் அமர்ந்துள்ளார் எல்லா நட்சத்திரங்கள், சந்திரன், அல்லது வானத்தில் பெயரிடப்பட்டுள்ள எல்லா நாமங்களும் இயேசு கிறிஸ்து என்ற நாமத்திற்கு கீழ்ப்படுத்தப்பட்டுள்ளன. ஏனென்றால், அவர் தாமே பிதாவாகிய தேவனால் சுவிகார புத்திரனாக்கப்பட்டார்.
50இப்பொழுது, அவருடைய சபைக்குள்ளாக நீங்கள் கிறிஸ்து இயேசுவிற்குள், ஸ்தானத்தில், உன்னதங்களிலே உட்கார வைக்கப்பட்டுள்ளீர்கள். தாழ்மையோடு இருங்கள், சகோதரர்களே. ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் பேசி, எங்கேயாவது ஒரு சிறு அறையிலோ, அல்லது மலை ஓரத்திலோ, அல்லது கழிவறையிலே எங்கேயாவது, உங்களை ஒரு பக்கமாக வெளியே அழைப்பார். அங்கே அவர் உங்களை ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யும்படியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சேவைக்காகவோ உங்களை அபிஷேகம் செய்வார்.
அது பிரிஸ்பிடேரிய போதகர்கள் அல்லது மூப்பர்கள் தங்களது கைகளை வைப்பதான காரியமாக இருக்காது. உங்களுக்குள் ஒரு புதிய ஊழியத்தையும், உங்கள் மேல் ஒரு புதிய அங்கியையும் அளிப்பதற்காகவும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக (மாதிரியாக) வைக்கும்படியாகவும், சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே தம்முடைய கரங்களை வைப்பதாகும். பிறகு வேதனையளிக்கும் பிசாசுகள் ஒருபோதும் உங்களை துக்கப்படுத்தாது. தேவனே என் சகோதரர்கள் ஒவ்வொருவரும் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள அருளும். நாம் ஜெபிப்போமாக.
51எங்கள் பிதாவாகிய தேவனே, இயேசுவுக்காக இந்த மத்தியான வேளையிலே நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எவ்விதமாக நீர் அவரை மறுரூபமலையில் மேலே எடுத்து அவர்களுக்கு முன்பாக மறுரூபமாக்கினீர். நீர் அவரை மாற்றினீர். புத்திர சுவிகாரமாக உமது சத்தம், ''இவர் என்னுடைய நேச குமாரன் இவருக்கு செவிகொடுங்கள்“, என்று உரைத்தது.
தேவனே, நாங்கள் செய்யும் அல்லது சொல்லும் எல்லாவற்றிலும் எங்களால் இயன்றவரை அவருக்கு செவி கொடுக்கவும், அவரைப் பின்பற்றவும் முயற்சி செய்கிறோம். தேவனே, இந்த வேளையிலே இந்த கட்டிடத்திற்குள்ளாக இங்கேயுள்ள ஒவ்வொரு ஊழியக்காரர் மீதும் இங்கிருக்கும் எல்லா மக்கள் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரிஸ்பிடேரியன், கத்தோலிக்கர் அவர்கள் யாராக இருந்தாலும் பிதாவே அவர்கள் மீதும் அவரை புதிதான அபிஷேகத்துடன் அனுப்பும். அவர்கள் உம்மை நேசிப்பதால் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அந்த புத்திர சுவிகார நேரத்திற்காக தவித்து காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்களில் ஒன்றில் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, கிறிஸ்துவின் மூலமாக நாங்கள் அதைப் பெற்றுவிட்டதால் புதிய பிறப்பினால் அல்ல, ஆனால் உம்முடைய சபையை நீர் சுவிகாரமாக்கிக் கொள்வீர், என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.
52பிறகு அவன் உயிர்த்தெழுந்த கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையிலே உடுத்தப்பட்டிருப்பான். வருகிற நாட்கள் மிகவும் இருளாகவும் பொல்லாததாகவும் காணப்படுகிறபடியால் நீர் இதை துரிதமாகச் செய்ய வேண்டுமென்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, நீர் இப்பொழுது எங்களை சுவிகாரத்திற்குள் உம்முடைய குடும்பத்திற்குள்ளாக புத்திரசுவிகாரமாக்கிக் கொள்ளும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம்.
உண்மையை மறுக்கிறவர்களை அமர்ந்திருக்கச் செய்யும் பொருட்டு பிதாவே, எங்களுக்கு தேவையான அதிகாரத்தை எங்களுக்குத் தாரும். அவர்கள் திரும்பி வந்தபோது, ''புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்?“ என்று அவர்கள் ஜெபித்ததில் வியப்பொன்றுமில்லை உண்மையாகவே, கர்த்தாவே, கூறினீர். உமது குமாரனுடைய நீட்டப்பட்ட கரத்தினால் பிணியாளிகளை சொஸ்தமாக்கும். பிதாவே, இன்று இங்குள்ள இழந்து போனவர்களை இரட்சித்தருளும். பிணியாளிகளை சொஸ்தமாக்கும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம்.
53நாம் நம் தலைகளை தாழ்த்தியிருக்கும் போது, சகோதரன் எக்பெர்க் ஒரு பாடலை வைத்திருப்பாரானால், இப்பொழுது அழைக்கும் பாடலைப் பாடலாம் என நினைக்கிறேன்.
உங்கள் கரத்தை உயர்த்தி, ''சகோதரர் பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்“, என்று கூறுவீர்களா‚ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, எல்லாயிடங்களிலும் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதித்து உதவி செய்வாராக, என்பதே என்னுடைய உண்மையான தாழ்மையான ஜெபமாகும்.
இப்பொழுது நான் இரவு ஆராதனைக்கு தயாராகும்படி ஓட வேண்டியுள்ளது, இன்னும் ஒருமணி நேரம் பதினைந்து நிமிடங்களில் ஜெப அட்டைகளை விநியோகிப்பார்கள். சகோ. போஸ்லே இப்போது பீடத்தில் வாரும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் ஜெபிக்கச் செல்லும் போது ஜெபத்தில் இருங்கள்.